அன்பை- என் விழிகளுக்கும்
பண்பை -என்
மொழிகளுக்கும்
இரக்கத்தை -என்
இதயத்திற்கும்
கற்றுக்கொடுத்த
என் தந்தையே !
மூன்றுமைல் தூரமானாலும்
முதுகிலும் தோளிலுமாய்
என்னைச் சுமந்தவரே !
வழியெல்லாம் பழங்கதைகள்
சொல்லிச்சொல்லி
என் இளமைக்கு
இறகுகள் கட்டிவிட்டவரே !
ஒருநாள்
நான்
எங்கோ தொலைந்துவிட
வாடியமுகத்தோடு
விடிய விடிய
கல்லிலும் முள்ளிலும்
கால்கிழிய அலைந்து
காட்டிலும் மேட்டிலும்
கதறிக் கலங்கி
இருட்டிலும் புதரிலும்
இடறி விழுந்து
கண்களில்
உயிரை வடியவிட்டு
திசையெல்லாம்
என்னைத் தேடித்திரிந்த
உங்கள்
பாசமலர்ப்பாதங்களுக்கு
என் கணணீர்த்துளிகளே !
காணிக்கை தந்தையே !
என்
பிள்ளைகளின்மேல்
நான்
காட்டமுடியாத
பாசத்தை
என் மேல்
காட்டிய
குணாளரே !
எதுவும்
ஈடில்லை உமக்கு !