செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

தன்னம்பிக்கை !

கை இல்லாமல் கூட வாழலாம் ஆனால் தன்னம்பிக்கையின்றி வாழாதே ! உலகம் உன்னைக்கண்டு ஒதுங்கும் , உறவுகள் உன்பக்கதில்வர அச்சப்படும் , உன்மனச் சாட்சி உன்னைப்பார்த்து வெட்கப்படும் . வரலாற்றின் உயிர்ப்பக்கங்களைஎல்லாம் புரட்டிப்போட்ட சாகசங்கள் தன்னம்பிக்கையால் விளைந்தனவே ! பள்ளிப்படிப்பையே தாண்டாத தாமஸ் ஆல்வா எடிசன் தன் சாதனைகளால் சரித்திரத்தையே புரட்டிப்போட்டது தன்னம்பிக்கையால்தானே ! இருள் மண்டிக்கிடந்த உலகிற்கு அவர் புது வெளிச்சம் பாய்ச்சப் புறப்பட்டபோது தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது முறை தோற்றிருக்கிறார்,ஆனாலும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு அவர் முயற்சித்ததால்தானே மின்சாரவிளக்கு நமக்குக்கிடைத்தது . உலகப்புகழ்பெற்ற மாபெரும் கவிஞன் ஜான் மில்ட்டன் கண்பார்வை இழந்த காலத்திலும் தன் தன்னம்பிக்கையால் இழந்த சொர்க்கம் என்னும் அழிவில்லாக்காவியத்தைப் படைத்துக்காட்டினார். சாதாரணப் போர்வீரனாயிருந்த நெப்போலியனை சரித்திர நாயகனாக மாற்றிக்காட்டியது அவனது தன்னம்பிக்கையல்லவா ! உலகத்தை வென்ற அத்தனை சாதனையாளர்களும் உரக்கச்சத்தமிட்டு உயர்த்திப்பிடித்த கொடி தன்னம்பிக்கைக்கொடிதானே ! இரண்டாம் உலகப்போரின்போது பேரழிவுகளைச் சந்தித்த ஜப்பான் எண்ணிப்பத்தாண்டுகளில் இமாலய சாதனைகளை எட்டிப்பிடித்தது தன்னம்பிக்கையால்தானே ! இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் தன்னம்பிக்கை செறிந்த வார்த்தைகள்தானே இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் தாக்குதலைத் தகர்த்தெறிந்து தரைமட்டமாக்கியது ! அமெரிக்காவைசார்ந்த் ஆம்ஸ்ட்ராங் ஆல்ட்ரின் நிலவைத் தொட்டுப்பிடித்ததும் , டென்சிங் எவரெஸ்ட் சிகரத்தைக்கட்டிப்பிடித்ததும் தன்னம்பிக்கையால் விளைந்த சாகசங்களல்லவா ? பொறியியல் கல்லூரியில் படிப்பில் தோல்வியுற்ற பில்கேட்ஸ் உலகத்தைத் தன் பணத்தாலும் உறவுகளைத் தன் மனத்தாலும் வெற்றிகொண்டது தன்னம்பிக்கையால்தானே ! உலகத்தில் ஏழையாய்ப் பிறப்பதில் தவறில்லை ,ஏழையாய் இறப்பதுதான் தவறு என்றான் ஒரு அறிஞன் . தன்னம்பிக்கையோடு உழைத்தால் எந்த நிலையையும் எவராலும் எட்டிப்பிடிக்க இயலும் . சாதாரண மோகன்தாஸ் காந்தி சரித்திரம் போற்றும் மகாத்மா காந்தி ஆனதும், சித்தார்த்தன் அகிலம் போற்றும் புத்தபிரான் ஆனதும், ஏழை வீட்டில் பிறந்த காமராஜ் தேசம் போற்றும் தேசத்தலைவர் ஆனதும் , வீரசிவாஜி மராட்டிய மன்னனானதும் தன்னம்பிக்கை தந்த நம்பிக்கையால் என்பதில் வியப்பில்லை !