ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

மடிந்துபோன மானம் !



உண்டு உறங்கி
உலவி மகிழ்ந்த
வீடு தாண்டி
நீர்ப்பாய்ச்சி
நெடுவயல்
நிறையக்கண்ட தன்
காடு தாண்டி
பெற்ற
பிள்ளைகளின்
பிஞ்சுமுகம்
பார்ப்பதற்காய்
உயிர்ப்பிச்சை கேட்டு
தஞ்சம் புகுந்த
தமிழ் மகனை
குண்டு மழை
பொழிந்து
கொன்று
கூறுபோட்ட
குற்றமிகு
கொலைகாரன்
ராஜபக்சே
குரல்வளை
நெரிக்கத்தான்
குமுறித்தான்
குரல் கொடுத்தோமா ?

இடிந்து விழுந்த
சுவற்றின் கீழ்
மடிந்து கிடந்த
பிணங்கள் !

பின்னிரவிலும்
பீரங்கி வண்டி
பிணவாடை வீசி
வந்ததே !

மணமேடை கண்ட
மறுநாள்
மணாளன்
பிணமானான் !

சனங்கள்
அழுத கண்ணீர்...
ஆறுஎனப்பெருகி ஓட
நீயோ ?
பிணமாய்க்கிடந்தாய் !
பெருமூச்சு விட்டுவிட்டால்
பெரும்பிழை
சேருமென்று !
பேராபத்து நேருமென்று !

கேட்பாரற்றுக்
கேவி அழுதது
தமிழ் இனம்
காதறுந்துபோன
தமிழ் தலைவர்களால் !

பாடசாலை
பாடைசாலையாய்
மாறிப்போனதே !
செஞ்சோலையில்
கண்கொண்டு
பார்த்த நாம்
கர்ஜ்ஜித்தோமா !
கதறித்தான் அழுதோமா !
பதறித்தான் துடித்தோமா !

பெற்ற பிள்ளை
தடுக்கி விழுந்தால்
தலை தெறிக்க
ஓடி வந்தாய் !
பிள்ளைப்பூக்கள்
பிணக்காடானபோதும்
தலை விதியென்று
தலை தாழ்த்திக்கொண்டாய் !
இதுவல்லவோ வீரம் !
நீயல்லவோ !
வீரத்தமிழ் மறவன் !
உனக்காகத்தானே
வரலாறு
வண்டி மையோடு
காத்துக்கிடக்கிறது...

பிறந்த வீடு !
பழகிய காடு !
புழுதி பறக்க
விளையாடிய வீதி !
அப்பன்
பிள்ளைக்கு
நிலாக்கதைகள் சொன்ன
முற்றம் !
அத்தனையும்
துறந்து வந்தான்
ஈழத்தமிழன்
ஆனால்
சிங்களனோ
அவன்
ஆடைகளை
உருவிவிட்டு
அம்மணமாய்
நிற்கவிட்டு
பிடரியிலே
சுட்டுவிட்டு
பிணமேடாக்கிவிட்டான் !

கோழிக்குஞ்சைக்
கொத்தித்தூக்க
பருந்து
பறந்து வந்தால்...
பறக்கமுடியாத
கோழி கூட
பாய்ந்தடிக்கும்
பாசத்தின் பேரதிர்வால் !
நீயும்
பாய்ந்தடித்தாய் !
பக்கத்து வீடுக்கோழியை
ஊற்றிக்கொண்ட சரக்கிற்கு
நறுக்கென்று
கடித்துக்கொள்ள...
உன்
இனமானம்
ஆடிக்கற்றிலே
அம்மியாய்ப் பறக்கிறதே !

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

இதயத்தோடு பேசுகிறேன் !

மணிக்கணக்காய் போதனை செய்வதைவிட ஒரு கணப்பொழுதேனும் உதவிசெய் ! பிரியும்போது இனிப்பான வார்த்தைகள் பேசு மறுபடியும் வாழ்வில் நீங்கள் சந்திக்கும் சாத்தியம் இல்லாமல்கூட இருக்கலாம் ! அன்புக்கு ஒரு கால்காசு மதிப்புகூட இல்லைஎன்று நீ எண்ணலாம் ஆனால் அதைக்கொண்டு அனைத்தையும் வாங்கமுடியும் ! கொஞ்சநாள் பிரிவு கொஞ்சவைக்கும் நீண்டநாள் பிரிவோ நெஞ்சுக்குள் நெருப்பை வளர்த்துவிடும் ! பாசம் என்னும் மொழியை பார்க்க இயலாதவர் பார்க்கமுடியும் பேச இயலாதவர் பேசமுடியும் கேட்க இயலாதவர் கேட்கமுடியும் பாசமும் பரிவும் இரட்டைக்குழந்தைகள் ! அன்பு இல்லாத மாளிகை மிருகங்களைக்கூட மிரளவைக்கும் இருண்ட குகைதானே ! மணம் வீசும் மல்லிகையை நீ வேறு பெயரிட்டு அழைத்தாலும் அதன் மணம் மாறுவதில்லை ! அதைப்போல நீ நல்லவர்களை தீயவர்கள் என்று அழைத்தாலும் அவர்கள் குணம் மாறுவதில்லை ! இன்பத்தின் பிறப்பிடம் ! எழிலின் இருப்பிடம் ! என்பது அவசரப்படுவது அன்று பொறுமையாய் இருப்பதே ! உனது சாதனைகளை சத்தமில்லாமல் சொல் ! ஆனால் உனது குறைகளை ஊரறிய சொல்லிவிடு ! நலிந்தோருக்கு நம்பிக்கை பிறக்கட்டும் ! கேவலம் ! பணம் சம்பாதிப்பதற்காக உயிர் போன்ற ஒழுக்கத்தையும் உயர்ந்த நற்பண்பையும் விலை பேசிவிடாதே ! கல்வி என்பது தெரியாததை தெரியச்செய்வது அன்று ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதே ! என்ற காந்தியின் வார்த்தையை நீ கவனத்தில்கொள் ! நல்லொழுக்கம் இல்லாதவனை வேதப்புத்தகம் மட்டுமே புனிதமாக்கிவிடாது என்ற மூத்தோர் முதுமொழியை மறந்துவிடாதே ! பதவியும் பணமும் வரும்போதுதான் ஒரு மனிதனின் உண்மைக்குணம் வெளிப்படுகிறது அதனால் பார்த்து பதவியில் அமரத்து ! உயர் பதவி என்பது உயர்ந்தோரை மிக உயர்ந்தோராகவும் தாழ்ந்தோரை மிக தாழ்ந்தோராகவும் காட்டுகின்ற காலத்தின் கண்ணாடி ! இளமையில் தந்தையை இழப்பது ! நடுவயதில் பிள்ளையை இழப்பது ! தடுமாறித் தடம் மாறும் வயதில் தாரத்தை இழப்பது ! இம்மூன்று துயரங்களும் மரணமும் ஒன்றுதான் நினைவில்கொள் ! முட்டிக்கொல்லும் யானை ! நாவால் தொட்டுக்கொல்லும் பாம்பு ! சிரித்தே கொல்வான் துரோகி ! இதோ ஒரு உபதேசம் ! உபதேசம் பண்ணாதே ! <\\\\\\

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

தன்னம்பிக்கை !

கை இல்லாமல் கூட வாழலாம் ஆனால் தன்னம்பிக்கையின்றி வாழாதே ! உலகம் உன்னைக்கண்டு ஒதுங்கும் , உறவுகள் உன்பக்கதில்வர அச்சப்படும் , உன்மனச் சாட்சி உன்னைப்பார்த்து வெட்கப்படும் . வரலாற்றின் உயிர்ப்பக்கங்களைஎல்லாம் புரட்டிப்போட்ட சாகசங்கள் தன்னம்பிக்கையால் விளைந்தனவே ! பள்ளிப்படிப்பையே தாண்டாத தாமஸ் ஆல்வா எடிசன் தன் சாதனைகளால் சரித்திரத்தையே புரட்டிப்போட்டது தன்னம்பிக்கையால்தானே ! இருள் மண்டிக்கிடந்த உலகிற்கு அவர் புது வெளிச்சம் பாய்ச்சப் புறப்பட்டபோது தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது முறை தோற்றிருக்கிறார்,ஆனாலும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு அவர் முயற்சித்ததால்தானே மின்சாரவிளக்கு நமக்குக்கிடைத்தது . உலகப்புகழ்பெற்ற மாபெரும் கவிஞன் ஜான் மில்ட்டன் கண்பார்வை இழந்த காலத்திலும் தன் தன்னம்பிக்கையால் இழந்த சொர்க்கம் என்னும் அழிவில்லாக்காவியத்தைப் படைத்துக்காட்டினார். சாதாரணப் போர்வீரனாயிருந்த நெப்போலியனை சரித்திர நாயகனாக மாற்றிக்காட்டியது அவனது தன்னம்பிக்கையல்லவா ! உலகத்தை வென்ற அத்தனை சாதனையாளர்களும் உரக்கச்சத்தமிட்டு உயர்த்திப்பிடித்த கொடி தன்னம்பிக்கைக்கொடிதானே ! இரண்டாம் உலகப்போரின்போது பேரழிவுகளைச் சந்தித்த ஜப்பான் எண்ணிப்பத்தாண்டுகளில் இமாலய சாதனைகளை எட்டிப்பிடித்தது தன்னம்பிக்கையால்தானே ! இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் தன்னம்பிக்கை செறிந்த வார்த்தைகள்தானே இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் தாக்குதலைத் தகர்த்தெறிந்து தரைமட்டமாக்கியது ! அமெரிக்காவைசார்ந்த் ஆம்ஸ்ட்ராங் ஆல்ட்ரின் நிலவைத் தொட்டுப்பிடித்ததும் , டென்சிங் எவரெஸ்ட் சிகரத்தைக்கட்டிப்பிடித்ததும் தன்னம்பிக்கையால் விளைந்த சாகசங்களல்லவா ? பொறியியல் கல்லூரியில் படிப்பில் தோல்வியுற்ற பில்கேட்ஸ் உலகத்தைத் தன் பணத்தாலும் உறவுகளைத் தன் மனத்தாலும் வெற்றிகொண்டது தன்னம்பிக்கையால்தானே ! உலகத்தில் ஏழையாய்ப் பிறப்பதில் தவறில்லை ,ஏழையாய் இறப்பதுதான் தவறு என்றான் ஒரு அறிஞன் . தன்னம்பிக்கையோடு உழைத்தால் எந்த நிலையையும் எவராலும் எட்டிப்பிடிக்க இயலும் . சாதாரண மோகன்தாஸ் காந்தி சரித்திரம் போற்றும் மகாத்மா காந்தி ஆனதும், சித்தார்த்தன் அகிலம் போற்றும் புத்தபிரான் ஆனதும், ஏழை வீட்டில் பிறந்த காமராஜ் தேசம் போற்றும் தேசத்தலைவர் ஆனதும் , வீரசிவாஜி மராட்டிய மன்னனானதும் தன்னம்பிக்கை தந்த நம்பிக்கையால் என்பதில் வியப்பில்லை !