வெள்ளி, 17 டிசம்பர், 2010

அழாதீர்கள் !

யாருக்குப் பிடிக்கும் 
இந்த அழுகை ? 
அதனால் அழாதீர்கள் ! 
 அழுகை ஆயுளைக் குறைக்கும் ! 
 அழுகை ஆற்றலை அழிக்கும் ! 
 அழுகை ஆண்மையை ஒழிக்கும் ! 
 அழுகை உங்கள் ஒரு காசுக் 
கடனைக்கூடக் குறைக்காதே ! 
அதனால் அழாதீர்கள் ! 
 யாருக்குப் பிடிக்கும் இந்தப் புலம்பல் ? 
அதனால் புலம்பாதீர்கள் ! 
 இளஞனே ! இரும்பு ஒடிக்கும் 
நரம்பு உனக்கு -நீ 
புலம்புவதும் வீண்தானே !

வெள்ளி, 10 டிசம்பர், 2010

கருவிழிக்குள் வசிப்பவளே !



அன்பு படர்ந்த

மலர்க்கொடியே !

என்
ஆயுள் காதலியே !


மணக்கும்
அரும்பாக

இனிக்கும்
கரும்பாக

குறும்பு மொழி பேசி
என்
நெஞ்ச இரும்பை
எறும்பாக்கிப்
போனவளே !

மதுமலரே !
மரிக்கொழுந்தே !
மல்லிகைப்
பூச்சரமே !
கலைமானே !
மலைத்தேனே !
பனி இதழே !
உன்னைப்
பருகாமல்
சருகானதே
நெஞ்சம் !

என்
கண்கள்
உன்னைத்
தேடித்தேடி
ஏமாந்த
நிமிஷங்களில்...
என்
விரல்கள்
உன்
படங்களைத்
தடவிப்பார்த்து
ஆறுதல்
கொள்கின்றன
காதலி !

விட்டு விட்டுத்
துடிக்கும்
இதயம்
நீ
விட்டுப்பிரிந்ததால்
தவிக்கிறதே !

காந்த ஊசி
எப்போதும்
வடக்கு நோக்கியே
நிற்பதுமாதிரி
என்
கண்களும்
உன்னை நோக்கியே
தவமிருக்கிறது
காதலி !

தூக்கம்
காணாத
காற்றைப்போல
என்
இதய மாடத்தில்
இரவும் பகலும்
உலவிக்கொண்டே
இருக்கிறது
உன் உருவம் !

என்
இருவிழியின்
கருவிழிக்குள்
வசிப்பவளே !

உன்
நினைவுகளை
அறுத்தெறிந்துவிட்டு
தூக்கச்சமுத்திரத்தில்
நான்
நீந்தும்போதும்
என்
பக்கத்தில்
மிதந்துகொண்டே
இருக்கிறது
உன்
முகம் !

சிரித்து மயக்கும்
உன்
ரோஜா இதழ்களில்
சத்தான முத்தமிட்டு
கூந்தல் கலைத்து
உன்
குங்குமப்பூ மார்பில்
குடியிருக்க
நான்வருவேன் !

தணியாத
காதலோடு
தனியாகத்தவிக்கும்
உன்
காதலன் ...

செவ்வாய், 7 டிசம்பர், 2010

உயிர் குடித்துப் போனவள் !

இளமை பூத்துக் 
குலுங்குகின்ற 
பருவத்தில்தான் 
எத்தனை ! எத்தனை ! 
வண்ணக்கனவுகள் ! 
 அந்நாளில் 
எனக்குப் பதினெட்டு ! 
நீயோ பருவ மொட்டு ! 
பிரியமானவளே ! 
நான் உன்னைப் 
பார்த்திருக்கக்கூடாது ! 
பார்த்திருந்தாலும் 
பேசியிருக்கக்கூடாது ! 
எங்கேயோ பிறந்த நீ 
எங்கேயோ பிறந்த 
என் உள்ளத்தில் 
எத்தனை காயங்களை 
ஏற்படுத்திவிட்டாய் ! 
 காதல் என்றால் 
கசப்பான வார்த்தையென 
நினைத்திருந்தேன் ! 
உன்னைப் பார்க்கும் வரையில் ! 
ஆனால் -நீ 
சிறகில்லாமல்
பறக்கும் வித்தையை 
என் இதயத்திற்குக் 
கற்றுக்கொடுத்தாய் ! 
 
கண்களால் 
பேசும் கலையை 
என் விழிகளுக்குக் 
கற்றுக்கொடுத்தாய் ! 
ஆண்டுவிழா மேடையில் 
காற்றிலே மிதந்துவந்த 
கவிதையாய் ...
அழகுமலர் நீ 
ஆடவந்தாய் ! 
தளிர்மேனி குலுங்க ! 
தண்டுக்கால்கள் தாளமிட ! 
மலர்க்கரங்கள் அசைய !  
வந்ததே என் 
தங்கச்சிலை ! 
தந்ததே எழில் சிந்தும் 
புது இன்பக்கலை ! 
அப்பப்பா ! 
எத்தனை பாவங்கள் ! 
எத்தனை அபிநயங்கள் ! 
ஒவ்வொரு அசைவிலும் 
என் உயிர் குடித்துப்போனாய் ! 
வீடுவந்த பின்னும் 
விடிய விடிய 
என் கண்ணுக்குள் ஆடி 
நெஞ்சுக்குள் குடிபுகுந்தாய் ! 
உன்னை மட்டுமே சுற்றிப் 
பறக்கும் வண்டானதே ! 
என் நினைவுகள் ! 
எரிமலையைக் 
குளிரவைக்கும் 
உன் ஈரப் பார்வை ! 
மின்சாரம் அறுந்து விழுந்து 
இருண்டு கிடக்கும் 
இரவில் ! 
நிலவொளியில் 
எப்போதாவது 
தலைகாட்டும் 
உன் ஆசைமுகம் !  
எப்போதும் 
நான் பார்த்திருக்க 
வரம் ஒன்று தருவாயா ? 
என் வடிவான பேரழகி !

திங்கள், 15 நவம்பர், 2010

காதல் கடிதம் !



இது
காதல் கடிதம்
என்று
காயப்பட்டுவிடாதே !
என்
கனிவான தோழியே !

நெஞ்ச அலைகளின்
நெருஞ்சிமுள்
விளையாட்டு !
குத்தினால்
ரத்தம் !
குலவினால்
முத்தம் !

குறிஞ்சிமலரே !
உன்னைக்
கண்டநாள் முதல்
உனக்கு

என்
இதயத்தில்
பூச்சூடி
பொட்டு வைத்து
அழகு பார்க்கிறேன் !

பட்டுவிடக்கூடாது
அந்த
பவளமலர்
என்ற
பரிதவிப்பால் !

பார்த்தவிழி
பார்த்தபடி
நிற்க !
நீர்த்தவிழி
வேர்த்தபடி
கக்க !
உன்
விழிகளில்
விலாசம்
தேடித்திரியும்
காதல் பறவை நான் !

சின்னத் தாமரையே !
செந்தூரத் தேன்மலரே !
சிந்திய
ரத்தமும்
முந்திய
யுத்தமும்
உன்
முகம் பார்க்கவே !

விடியும் வரை
காத்திருந்தாலும்
வடியும்
கண்ணீர்த் துளியில்
உன்
வண்ண முகம்
பார்த்திருப்பேன் !

மனம் இருந்தால்
சொல்லிவிடு !
மனம் இல்லையேல்
மன்னித்துவிடு !

ஞாயிறு, 14 நவம்பர், 2010

கவலை !

கவலை கொள்ளாதீர்கள் ! காரணம் நெருப்பு உயிரற்ற உடலை எரிக்கிறது ! கவலையோ மனிதனை உயிரோடு எரிக்கிறது !

சனி, 6 நவம்பர், 2010

நீ மட்டும் தூரத்தில் !




இதயநிலா!...: காதல் கவிதைகள் !: "
நீயும் நானும்
ஒன்றாய்ப்
பார்த்த
வானம் !

ஒன்றாய்க்
கேட்ட
கானம் !

ஒன்றாய்
விளையாடிய
மைதானம் !

ஒன்றாய்க்
குளித்த
ஓடை !

ஒன்றாய்க்
குதித்த
தாத்தாவீட்டுத்
திண்ணை !

ஒன்றாய்ப்
படித்த
பள்ளி !

ஒன்றாய்
நடந்து வந்த
ஒத்தையடிப்
பாதை !

ஒன்றாய்
நனைந்துவந்த
பொதிகை
மலைச்சாரல் !

ஒன்றாய்
அமர்ந்திருந்த
ஆலமரத்தின்
அடிக்கிளை !

ஒன்றாய்
ஊஞ்சல் கட்டி
ஆடிய
ஒற்றைப்
புளியமரம் !

ஒன்றாய்
ரசித்த
மலைக்கோவில் !

ஒன்றாய்
நீந்திப்
பழகிய
குளக்கரை !

ஓராயிரம்
கனவுகளை
வளர்த்துவிட்ட
உன்
ஓரவிழிப்பார்வை !

எல்லாம்
என்
பக்கத்தில்
நீ மட்டும்
தூரத்தில் !

வியாழன், 28 அக்டோபர், 2010

ஓவியப்பாவை !


ஓவியப்பாவையே!
உன்
நீவிய
கூந்தலில்
ஆவியைத்
தொலைத்துவிட்டு
அலைகின்றேன்
ராப்பகலாய் !

திண்ணையிலே
நீ
இருந்தாய் !
தெருவெல்லாம்
நான்
திரிந்தேன் !

காலம் கிழிக்கும்
உன்
ஞாபகங்கள் !

காவியம் பேசிய
உன்
கால்கொலுசு
மணிகள்!

ஜன்னல்
வழிவந்த
மின்னல்
பார்வைகள்!

இத்தனையும்
இதயக் கிடங்கில்
இன்னும்
பத்திரமாய் !

நீ
என்றும்
நெஞ்சில்
அழியாத
சித்திரமாய்!

வெள்ளி, 22 அக்டோபர், 2010

காலம் உள்ளவரை காமராஜ் !


காமராஜ்
ஈடில்லாதவர்!
இணையில்லாதவர்!-ஒரு
கூடில்லாதவர்!

காற்றைப்போல
எவர்
வலையிலும்
சிக்காதவர்!
சிங்கத்தைப்போல
ஒலிகளுக்கு
அஞ்சாதவர்!

வால் பிடித்து
வாழாதவர்!
போலி
ஆள் பிடித்து
ஆளாதவர்!

காமராஜ்!
தியாகத்தின்
பிறப்பிடம்!
நேர்மையின்
இருப்பிடம்!
உண்மையின்
நிழற்படம்!

காமராஜ்!
அகழ்வாரைத்
தாங்கும்
நிலம் போல
தம்மை
இகழ்வாரைத்
தாங்கிய
கருப்பு நிலா!

காமராஜ்!
அன்பானவர்!
அறிவானவர்!
பாவங்கள்
அறியாதவர்!
பண்பானவர்!
பதமானவர்!
பழிகள்
சொல்லாதவர்!

காமராஜ்!
கனிவானவர்!
கடமை
தவறாதவர்!
கருணை
ஊற்றானவர்!

காமராஜ்!
ஆளுயர மாலை
கண்டு
அசராதவர்!
அதிகார
வர்க்கத்திற்குப்
பதறாதவர்!

மாசில்லாதவர்!-ஒரு
மாற்றுக்குறையாதவர்!
கடவுள்தான் அவர்
ஆனால்
கையில் காசு
இல்லாதவர்!

காதல் ருசி
இல்லாதவர்!
பதவிப் பசி
இல்லாதவர்!
கர்வமில்லாதவர்!
ஆனால்
கௌரவமானவர்!

காமராஜ்!
கலகம்
செய்தவரில்லை!
கள்ள வேடம்
போட்டவரில்லை!
காசு என்னும்
அமிலத்தில்
ஒரு நாளும்
கரைந்தவரில்லை!

காமராஜ்!
அணைகள்
கட்டிய மன்னன்!
ஆலைகள்
கட்டிய மன்னன்!
தனக்காக
ஒரு குடிசை
ஒரு நாளும்
கட்டியதில்லை!

காமராஜ்!
மேட்டிலே
நின்ற போதும்
பள்ளத்தை
நினைத்துக்
கிடந்தவர்!

குடி
கெடுத்தவரில்லை!
குற்றம்
புரிந்தவரில்லை!
குள்ள நரி போல
தந்திரம்
புரிந்தவரில்லை!

காமராஜ்!
பாமரன்!
பாமரனுக்காய்
வாழ்ந்தவர்!

ஆசைகளைத்
துறந்தவர்
எத்தனையோ
பதவிகளில்
இருந்தவர்!
ஏழையாய்ப்
பிறந்தவர்!
ஏழையாய்
இறந்தவர்!

காமராஜ்!
அதிகம்
படித்தவரில்லை!
அதிகம்
நடித்தவரில்லை!
நா நயம்
பேசாதவர்!
நாணயம்
உள்ளவர்!

ஆடம்பரம்
இலலாதவர்!
ஆர்ப்பாட்டம்
செய்யாதவர்!

ஆற்றைப்போல
அனைவருக்கும்
நீர் தந்தார்!

காற்றைப்போல
அனைவருக்கும்
உயிர் தந்தார்!

காமராஜ்!
உண்மையின்
வேர்களுக்கு
நீர் வார்த்தவர்!
காந்தி மகன்தான் அவர்!
கருணைத்தேன்தான் அவர்!
காந்தி
பிறந்த நாளில்
கடைசி மூச்சு
வாங்கினார் அவர்!

சனி, 4 செப்டம்பர், 2010

பாசமுள்ள தந்தைக்கு !

அன்பை- என் 
விழிகளுக்கும்
பண்பை -என் 
மொழிகளுக்கும் 
இரக்கத்தை -என் 
இதயத்திற்கும் 
கற்றுக்கொடுத்த 
என் தந்தையே ! 
மூன்றுமைல் தூரமானாலும் 
முதுகிலும் தோளிலுமாய் 
என்னைச் சுமந்தவரே !  
வழியெல்லாம் பழங்கதைகள் சொல்லிச்சொல்லி 
என் இளமைக்கு 
இறகுகள் கட்டிவிட்டவரே !
ஒருநாள் 
                                                               நான் எங்கோ தொலைந்துவிட
                                                               வாடியமுகத்தோடு 
                                                               விடிய விடிய 
                                                               கல்லிலும் முள்ளிலும் 
                                                               கால்கிழிய அலைந்து 
                                                               காட்டிலும் மேட்டிலும் 
                                                               கதறிக் கலங்கி 
                                                               இருட்டிலும் புதரிலும் 
                                                               இடறி விழுந்து 
                                                               கண்களில் 
                                                               உயிரை வடியவிட்டு 
                                                               திசையெல்லாம் 
                                                               என்னைத் தேடித்திரிந்த 
                                                               உங்கள் 
                                                               பாசமலர்ப்பாதங்களுக்கு 
                                                              என் கணணீர்த்துளிகளே ! 
                                                              காணிக்கை தந்தையே ! 
                                                              என் பிள்ளைகளின்மேல் 
                                                              நான் காட்டமுடியாத 
                                                              பாசத்தை 
                                                              என் மேல் காட்டிய 
                                                              குணாளரே ! 
                                                              எதுவும் ஈடில்லை உமக்கு !

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

கடந்தகாலத்தின் வசந்தகாலமே!


ஆமை!
அங்கும் இங்கும்
அலைந்தாலும் அதன்
நினைவுகள் மட்டும்!
கரையோரத்தில்
கிடக்கும் -அதன்
முட்டைகள் மீது
தங்கிக்கிடப்பது மாதிரி!
நான்
அங்கும் இங்கும்
அலைந்தாலும்
என்
நினைவுகள் மட்டும்
உன்னிடத்திலேயே
தங்கித் தவிக்கிறது
காதலி!
என்
கடந்தகாலத்தின்
வசந்தகாலமே!
உன்னை
நினைக்கும்
போதெல்லாம்
இதயத்தில் கருவாகி!
கண்களில் உருவாகி!
கன்னங்களில்
நதியாகின்றதே
கண்ணீர்!

புதன், 4 ஆகஸ்ட், 2010

காதல் கிளியே !



யாருக்கும் கட்டுப்படாத
என்
முரட்டு இதயத்தை
நீ எப்படி
குழைத்தெடுத்து
உன் கண்களிலே
அஞ்சனமாய்த்
தீட்டிக்கொண்டாய்!
விழியாலே
மொழிபேசிய
என்
கன்னிமாடக்கிளியே!
உன்
குழிவிழுந்த
கன்னத்தில்
ஒளிந்துகொள்ள
நான்வரவா!
மருதாணிவிரல்களில்
மல்லிகைப்பூ
நான்தரவா!

புதன், 28 ஜூலை, 2010

இனியவளே !


இனியவளே!
உன்
விழிக்கதவு
திறந்தபோதல்லாம்
நான்
இன்னொருமுறை
பிறப்பெடுத்தேன்!
எந்தத்தாவணி!
மழைபடிந்த
என் கேசத்தை!
தொட்டுத்துடைத்ததோ?
அந்தத்
தாவணியில்
சவமாகக்கிடக்கவும்
சம்மதிக்கிறேன்!

சனி, 24 ஜூலை, 2010

பள்ளி நாட்களில்...




















பார்த்தவுடன் மனதினில் 
உதித்தது நீயடி! 
 பனிவிழும் மலரினில் 
 பருகிய தேனடி! 
 பள்ளி நாட்களில் 
 பதிந்து விட்ட உன்னை 
 கிள்ளி எறிய 
 இயலவில்லை! 
 துள்ளித்திரிந்த 
 நாட்களில்... 
 துணையாய் 
 வந்தவளே! நீ 
 அள்ளிக் கொடுத்த 
 அன்பை ...
 வெள்ளி நிலவின் 
 வீதியில் விட்டுவிட்டேன்! 
 உனக்காக ஒரு ரோஜா! 
 உன் கூந்தலிலிருந்து 
 நழுவிய ரோஜா! 
 பாதுகாக்கிறேன் 
 பல ஆண்டு காலமாய்! 
 சில ஆண்டு கால 
 நினைவுகளால்!