வெள்ளி, 22 அக்டோபர், 2010

காலம் உள்ளவரை காமராஜ் !


காமராஜ்
ஈடில்லாதவர்!
இணையில்லாதவர்!-ஒரு
கூடில்லாதவர்!

காற்றைப்போல
எவர்
வலையிலும்
சிக்காதவர்!
சிங்கத்தைப்போல
ஒலிகளுக்கு
அஞ்சாதவர்!

வால் பிடித்து
வாழாதவர்!
போலி
ஆள் பிடித்து
ஆளாதவர்!

காமராஜ்!
தியாகத்தின்
பிறப்பிடம்!
நேர்மையின்
இருப்பிடம்!
உண்மையின்
நிழற்படம்!

காமராஜ்!
அகழ்வாரைத்
தாங்கும்
நிலம் போல
தம்மை
இகழ்வாரைத்
தாங்கிய
கருப்பு நிலா!

காமராஜ்!
அன்பானவர்!
அறிவானவர்!
பாவங்கள்
அறியாதவர்!
பண்பானவர்!
பதமானவர்!
பழிகள்
சொல்லாதவர்!

காமராஜ்!
கனிவானவர்!
கடமை
தவறாதவர்!
கருணை
ஊற்றானவர்!

காமராஜ்!
ஆளுயர மாலை
கண்டு
அசராதவர்!
அதிகார
வர்க்கத்திற்குப்
பதறாதவர்!

மாசில்லாதவர்!-ஒரு
மாற்றுக்குறையாதவர்!
கடவுள்தான் அவர்
ஆனால்
கையில் காசு
இல்லாதவர்!

காதல் ருசி
இல்லாதவர்!
பதவிப் பசி
இல்லாதவர்!
கர்வமில்லாதவர்!
ஆனால்
கௌரவமானவர்!

காமராஜ்!
கலகம்
செய்தவரில்லை!
கள்ள வேடம்
போட்டவரில்லை!
காசு என்னும்
அமிலத்தில்
ஒரு நாளும்
கரைந்தவரில்லை!

காமராஜ்!
அணைகள்
கட்டிய மன்னன்!
ஆலைகள்
கட்டிய மன்னன்!
தனக்காக
ஒரு குடிசை
ஒரு நாளும்
கட்டியதில்லை!

காமராஜ்!
மேட்டிலே
நின்ற போதும்
பள்ளத்தை
நினைத்துக்
கிடந்தவர்!

குடி
கெடுத்தவரில்லை!
குற்றம்
புரிந்தவரில்லை!
குள்ள நரி போல
தந்திரம்
புரிந்தவரில்லை!

காமராஜ்!
பாமரன்!
பாமரனுக்காய்
வாழ்ந்தவர்!

ஆசைகளைத்
துறந்தவர்
எத்தனையோ
பதவிகளில்
இருந்தவர்!
ஏழையாய்ப்
பிறந்தவர்!
ஏழையாய்
இறந்தவர்!

காமராஜ்!
அதிகம்
படித்தவரில்லை!
அதிகம்
நடித்தவரில்லை!
நா நயம்
பேசாதவர்!
நாணயம்
உள்ளவர்!

ஆடம்பரம்
இலலாதவர்!
ஆர்ப்பாட்டம்
செய்யாதவர்!

ஆற்றைப்போல
அனைவருக்கும்
நீர் தந்தார்!

காற்றைப்போல
அனைவருக்கும்
உயிர் தந்தார்!

காமராஜ்!
உண்மையின்
வேர்களுக்கு
நீர் வார்த்தவர்!
காந்தி மகன்தான் அவர்!
கருணைத்தேன்தான் அவர்!
காந்தி
பிறந்த நாளில்
கடைசி மூச்சு
வாங்கினார் அவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக