

உண்டு உறங்கி
உலவி மகிழ்ந்த
வீடு தாண்டி
நீர்ப்பாய்ச்சி
நெடுவயல்
நிறையக்கண்ட தன்
காடு தாண்டி
பெற்ற
பிள்ளைகளின்
பிஞ்சுமுகம்
பார்ப்பதற்காய்
உயிர்ப்பிச்சை கேட்டு
தஞ்சம் புகுந்த
தமிழ் மகனை
குண்டு மழை
பொழிந்து
கொன்று
கூறுபோட்ட
குற்றமிகு
கொலைகாரன்
ராஜபக்சே
குரல்வளை
நெரிக்கத்தான்
குமுறித்தான்
குரல் கொடுத்தோமா ?
இடிந்து விழுந்த
சுவற்றின் கீழ்
மடிந்து கிடந்த
பிணங்கள் !
பின்னிரவிலும்
பீரங்கி வண்டி
பிணவாடை வீசி
வந்ததே !
மணமேடை கண்ட
மறுநாள்
மணாளன்
பிணமானான் !
சனங்கள்
அழுத கண்ணீர்...
ஆறுஎனப்பெருகி ஓட
நீயோ ?
பிணமாய்க்கிடந்தாய் !
பெருமூச்சு விட்டுவிட்டால்
பெரும்பிழை
சேருமென்று !
பேராபத்து நேருமென்று !
கேட்பாரற்றுக்
கேவி அழுதது
தமிழ் இனம்
காதறுந்துபோன
தமிழ் தலைவர்களால் !
பாடசாலை
பாடைசாலையாய்
மாறிப்போனதே !
செஞ்சோலையில்
கண்கொண்டு
பார்த்த நாம்
கர்ஜ்ஜித்தோமா !
கதறித்தான் அழுதோமா !
பதறித்தான் துடித்தோமா !
பெற்ற பிள்ளை
தடுக்கி விழுந்தால்
தலை தெறிக்க
ஓடி வந்தாய் !
பிள்ளைப்பூக்கள்
பிணக்காடானபோதும்
தலை விதியென்று
தலை தாழ்த்திக்கொண்டாய் !
இதுவல்லவோ வீரம் !
நீயல்லவோ !
வீரத்தமிழ் மறவன் !
உனக்காகத்தானே
வரலாறு
வண்டி மையோடு
காத்துக்கிடக்கிறது...
பிறந்த வீடு !
பழகிய காடு !
புழுதி பறக்க
விளையாடிய வீதி !
அப்பன்
பிள்ளைக்கு
நிலாக்கதைகள் சொன்ன
முற்றம் !
அத்தனையும்
துறந்து வந்தான்
ஈழத்தமிழன்
ஆனால்
சிங்களனோ
அவன்
ஆடைகளை
உருவிவிட்டு
அம்மணமாய்
நிற்கவிட்டு
பிடரியிலே
சுட்டுவிட்டு
பிணமேடாக்கிவிட்டான் !
கோழிக்குஞ்சைக்
கொத்தித்தூக்க
பருந்து
பறந்து வந்தால்...
பறக்கமுடியாத
கோழி கூட
பாய்ந்தடிக்கும்
பாசத்தின் பேரதிர்வால் !
நீயும்
பாய்ந்தடித்தாய் !
பக்கத்து வீடுக்கோழியை
ஊற்றிக்கொண்ட சரக்கிற்கு
நறுக்கென்று
கடித்துக்கொள்ள...
உன்
இனமானம்
ஆடிக்கற்றிலே
அம்மியாய்ப் பறக்கிறதே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக